Total Pageviews

Friday 5 August 2011

POSTAL NEWS IN DINAMANI DAILY

வேடிக்கையல்ல, வேதனை... "தினமணி" 03.08.2011






தலையங்கம்: வேடிக்கையல்ல, வேதனை...



இந்தியாவில் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்களும் வங்கிகளாக மாற்றப்படும்; இதற்காக ரிசர்வ் வங்கியின் அனுமதியைக் கேட்போம்'' என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். அஞ்சல்துறையில் உள்ள உயர்அதிகாரிகளைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள், ""நான்கு ஆண்டுகளாக இதைப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம், நடைமுறைப்படுத்தும் வழியைத்தான் காணோம்'' என்று.

சில கடிதங்கள் காணாமல் போவதைப்போல அஞ்சல் துறையில் சில திட்டங்கள் காணாமல் போகும். சில கடிதங்கள் காலதாமதமாகப் பட்டுவாடா செய்வதைப்போல, பல திட்டங்கள் காலதாமதமாக நடைமுறைக்கு வரும். இது அஞ்சல்துறைக்குப் பழகிப்போன ஒன்று.

சரக்குகளை, பொருள்களைக் கொண்டு சேர்க்கும் "லாஜிஸ்டிக்' சேவையைத் தொடங்க பத்து ஆண்டுகளாகப் பேசிப்பேசி காலத்தை வீணடித்தார்கள். புதிய திட்டம் என்றதும் தொழிற்சங்கங்கள், "எங்களால் இப்போதே சுமக்க முடியாத அளவுக்கு வேலைப்பளு உள்ளது. இந்தத் திட்டத்துக்குத் தனியாகப் பணியாளர்களை நியமித்துவிட்டுத்தான் தொடங்க வேண்டும்' என்று குரல் கொடுத்தவுடன் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அது செயல்படத் தொடங்கியுள்ளது.

இதையும்கூட, களத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வோ உந்துதலோ இல்லாமல், கருத்தடை சாதனங்கள் உள்ளிட்ட சில அரசுப் பொருள்களை மட்டுமே இந்தியா முழுவதுக்கும் கொண்டு சேர்க்கிற, அதாவது தன்னைத் தேடி வந்தால் அதை ஏற்றுக்கொள்கிற, மனநிலையில் மாற்றம் இல்லாத நிலைமைதான் தொடர்கிறது.

கூரியர் சேவை சக்கைப்போடு போட்ட நேரத்தில், "ஸ்பீடு போஸ்ட்' கொண்டு வந்தார்கள். நடைமுறையில் கூரியர் நிறுவனங்கள் 12 ரூபாய்க்குச் சேவை அளித்தபோது, அஞ்சல்துறை ரூ.30 கட்டணமாகத் தீர்மானித்தது. தனியார் கூரியர்கள் கடிதம் போகவேண்டிய தொலைவுக்கு ஏற்பவும், வெளிமாநிலங்களுக்கும் கட்டணத்தை மாற்றி அமைக்கும்போது, இவர்களது ஒரே கட்டணம் ரூ.30 தான். கூரியர் நிறுவனங்கள் தில்லிக்குச் செல்லும் கடிதங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலித்து, அதே கடிதத்தை "ஸ்பீடு போஸ்ட்'டில் அனுப்பிய புத்திசாலித்தனங்களும்கூட காணநேர்ந்தது. ஆனால், அஞ்சல் துறை இன்னமும் தனது நடைமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் அலுவலகங்கள் கணினிமயமானபோது, 15 ஆண்டுகளாகத் தனது கிளைகளை கணினிமயம் செய்யாத ஒரே துறை அஞ்சல்துறைதான். இப்போதும்கூட இந்தியாவில் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்களில், கணினியால் இணைக்கப்பட்ட கிளைகள் வெறும் 8,000 மட்டும்தான் என்று சொல்லப்படுகிறது. நிலைமை இதுவாக இருக்கும்போது, 1.5 லட்சம் கிளைகளையும் வங்கிகளாக மாற்றும் முயற்சி எப்படி சாத்தியம் என்பது கபில் சிபலுக்குத்தான் வெளிச்சம்.

கணினிமயமாகிவிட்ட இந்த 8,000 கிளைகளைக்கூட நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வங்கிகளாக மாற்றியிருந்தாலும், இந்நேரம் நிலைமை பெருமளவு மாறியிருக்கும். ஏனென்றால், இந்தியா முழுவதும் பாரத ஸ்டேட் வங்கிக்கு மொத்தமுள்ள கிளைகள் 2010-ம் ஆண்டு கடைசிவரை 12,450 மட்டுமே. ஏடிஎம் மையங்கள் 21,000 மட்டுமே.

இந்த மெத்தனத்துக்குக் காரணம் அஞ்சல் துறை மக்களுக்கான சேவை நிறுவனம் என்ற மாயையைத் தொடர்ந்து தக்கவைத்து வருவதுதான். அஞ்சல்துறையில் 2010-11-ம் நிதியாண்டில் கிடைத்த நிகர வருவாய் ரூ.6,954 கோடி. இழப்பு ரூ.6,266 கோடி. இது இல்லாமல் 2011-ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு இத்துறைக்கு ஒதுக்கிய தொகை ரூ.5,108 கோடி! மக்கள் பணம் பாழாகிறது.

கொள்ளை லாபம் பார்க்கும் தனியாரைப்போல அல்லாமல், குறைந்த அளவு லாபத்தில் சேவை அளிக்கும் பொது நிறுவனமாக அஞ்சல்துறை மாற்றப்பட வேண்டும். அதன் லாப, நஷ்டங்களைப் பொறுத்தே சம்பளங்கள், ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்ற நிலைமை வந்தால்தான், அந்தத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பொறுப்பாகச் செயல்படுவார்கள்.

இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களை வங்கிகளாக மாற்றுவதற்கு முன்பாக மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டிய அவசியம் அல்லது அவல நிலை, இன்று அஞ்சல்துறைக்கு நேர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்கு, தொடர் சேமிப்புக் கணக்கு (ஆர்.டி.) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. வங்கிகளின் பாதி செயல்பாடு அஞ்சல் நிலையங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்தச் சேமிப்புக் கணக்குகள் வைத்திருப்போர் அதிகம்பேர் முதியோர், மிக அதிகமானோர் கிராமவாசிகள். பல இடங்களில் இந்த ஏழைகளின் கணக்கிலிருந்து சிறுகச்சிறுக பணம் முறைகேடாக எடுக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய. இது குறித்துப் புகார்கள் வந்தாலும், நடவடிக்கை எடுக்கப் பயப்படும் நிலையில் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படாமல் ஏரியோரம், குப்பைகளில் கொட்டப்பட்ட சம்பவங்கள் அஞ்சல்துறையின் கவனத்துக்கு வந்துள்ளன. இதுவரை என்ன நடவடிக்கை? சென்ற ஆண்டு குளித்தலையில், மாணவர்களின் விடைத்தாள் கட்டு, விடை திருத்தும் மையத்துக்குப் போகவே இல்லை. இந்த விவகாரத்திலும் என்ன நடவடிக்கை?

தவறு செய்யும் ஊழியர்களைக் காப்பாற்றத்தான் அஞ்சல்துறை முயற்சி செய்யும் என்றால், அந்தத் துறை எப்படிச் சீர்படும்? மக்களிடம் எப்படி நம்பகத்தன்மை ஏற்படும்? அனைத்துக் கிளைகளையும் வங்கிகளாக மாற்றினால், அதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவார்களா?

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய அரசு தீர்மானித்தபோது, கூறப்பட்ட முக்கியமான காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா? போட்டி என்று ஏற்படுத்துவதன் மூலம் தனியார் துறைக்கு நிகரான சுறுசுறுப்பும், சேவை உணர்வும், லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற முனைப்பும் அரசு நிறுவனங்களுக்கு ஏற்படும் என்பதுதான். தனியார் கூரியர் நிறுவனங்களும், தனியார் தொலைபேசி, கைபேசி நிறுவனங்களும் வந்தன வென்றன. அஞ்சல், தொலைத்தொடர்புத் துறை மட்டும் தள்ளாடுகிறது. வேடிக்கையாக, அல்ல அல்ல, வேதனையாக இருக்கிறது!





Courtesy: Dinamani